தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்: ஒரு தொல்லியல் பார்வை (Evolution of the Tamil script: An Archaeological Perspective)
சிந்துசமவெளி பண்பாட்டில் காணப்படுகின்ற வரிவடிவங்களையும் அதனைத் தொடர்ந்து செப்புக்காலப் பண்பாட்டிலும் இரும்புக்காலப் பண்பாட்டிலும் காணப்படுகின்ற குறியீடுகளையும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்திய போதிலும் இவ்வெழுத்துருக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் படித்துணரப்படவில்லை. இந்தியாவில் கி.மு. 3000 முதல் கி.மு. 500 வரை நின்று நிலவிய பல்வேறு எழுத்து வரிவடிவங்கள் முழுமையாக படித்துணரப்படாததால் இக்காலக்கட்டத்தில் நின்று நிலவிய பல்வேறு மொழிகளின் கூறுகளையும் அம்மொழிகளுக்கான எழுத்துருக்களையும் முழுமையாக வெளிக்கொணர இயலாது போய்விட்டன. இருப்பினும் அசோகருடைய கல்வெட்டுக்களில் காணப்படுகின்ற வரிவடிவங்களாகிய பிராமி எழுத்து வரிவடிவங்களை படித்தறிந்ததின் மூலம் இந்தியாவில் பிராமி வரிவடிவத்தின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு பின் நோக்கி தள்ளப்பட்டது.
இந்தியாவில் அக்காலகட்டத்தில் வழக்கில் இருந்ததாகக் கருதப்படும் அசோகன்–பிராமி வரிவடிவமும், தமிழ்-பிராமி வரிவடிவமும் நன்கு படித்தறியபட்டபோதிலும் இவற்றிற்கான காலவரையறை செய்வதில் இடர்பாடுகளை சந்தித்தனர். பிராமி வரிவடிவங்களின் காலத்தை தொல்லியலார் அகழாய்வுக்குழிகளில் காணப்படும் மண்ணடுக்குகளின் அடிப்படையிலும், கல்வெட்டியலார் வரிவடிவத்தின் அடிப்படையிலும், மொழியியலார் மொழிக்கூறுகளின் அடிப்படையிலும் காலக்கணிப்பு செய்தனர். இவர்கள் பின்பற்றிய பன்முக ஆய்வு நெறிமுறையின் காரணமாக பிராமி எழுத்துருக்களின் காலக்கணிப்பு தொடர்பாக ஓர் ஒப்புமை காணப்படவில்லை. ஆயினும் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் கிடைத்த பிராமி எழுத்து பொறிப்பு பெற்ற மட்பாண்டங்களும், தமிழகத்தில் புலிமான்கோம்பை மற்றும் தாதப்பட்டியில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்து பொறிப்பு பெற்ற சங்ககால நடுகற்களும், பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வில் வெளிப்போந்த தமிழ்-பிராமி எழுத்து பொறிப்பு பெற்ற மட்பாண்டங்களும் தமிழ்-பிராமி எழுத்துக்களின் காலம் குறித்து இதுவரை கொண்டிருந்த கருத்துக்களை மீண்டும் மறு ஆய்வு செய்யத்தூண்டின.
தமிழ் நாட்டில் கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகளும், புலிமான்கோம்பை, தாதப்பட்டியில் கிடைத்த நடுகற்களும், கொடுமணல், உறையூர், கொற்கை, கரூர், கீழடி, பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி பொறிப்பு கொண்ட மட்பாண்டங்களும் அறிவியல் முறைப்படி காலக்கணிப்பு செய்யப்பட்டு அவை அளித்த முடிவுகள் தமிழகம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை புலப்படுத்துகின்றன. இன்றைய நிலையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே வழக்கத்திற்கு வந்துவிட்ட தமிழி என்றழைக்கப்படும் தமிழ்-பிராமி வரிவடிவம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டுவாக்கில் வட்டமாக மாற்றம் பெறத் துவங்கின. இம்மாற்றம் கி.பி. 5ஆம் நூற்றாண்டுவாக்கில் வட்டெழுத்தாக வடிவம் பெற்றன. இத்தொல் தமிழ் வரிவடிவம், தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட கிரந்த வடிவத்துடன் இணைந்து தற்பொழுது நாம் பயன்படுத்தப்படும் தமிழ் வரிவடிவமாக கி.பி.7-8ஆம் நூற்றாண்டுவாக்கில் மலரத்தொடங்கின. தமிழ் மொழியும், தமிழ் வரிவமும் சமகால சமூக பண்பாட்டு மாற்றங்களுக்கு உகந்தவாறும், தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தக்கவாறும் தம்மை மாற்றிக்கொண்டு வளர்ச்சி பெற்று வருகின்றன.
இந்த உரை தமிழ் (14 ஏப்ரல், மதியம் 2.00 – 4.00) மற்றும் ஆங்கிலத்தில் (15 ஏப்ரல், காலை 11.00 – 1.00) நடத்தப்படுகிறது.
பேச்சாளர் பற்றி
டாக்டர் கா ராஜன் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் 2006 முதல் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக 1989 முதல் 2006 வரை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியற்றியுள்ளார். சீனாவில் உள்ள சங்காய் தொல்லியல் கழகம் உலகளவிலான தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கான வரிசையில் உலகின் மிகச்சிறந்த தொல்லியலாளர் விருதை இவருக்கு 2013ஆம் ஆண்டு வழங்கி பெருமைபடுத்தியுள்ளது. மேலும் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளார். மெய்சன் தே சயன்ஸ், பாரிஸ், பிரான்சு (1998), காகுஸுய்ன் பல்கலைக்கழகம், ஜப்பான் (1997, 2000 மற்றும் 2003), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (1998, 1999, மற்றும் 2004-05), லண்டன் பல்கலைக்கழகம் (2002), சோபொர்ன் பல்கலைக்கழகம், பாரிஸ், பிரான்சு (2009), ஆகியவற்றில் வருகைதரு ஆய்வாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் தென்னிந்தியத்தொல்லியல், வரலாற்றுத்தொல்லியல், வணிகம் மற்றும் தொன்மை தொழில்நுட்பம் போன்றவற்றில் புலமை பெற்றவர்.
- Title was changed to "தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்: ஒரு தொல்லியல் பார்வை (Evolution of the Tamil script: An Archaeological Perspective)". Orig#236004 2017-03-29 01:56:14
2:00 PM - 4:00 PM SGT
- Venue
- IHC, Activity Room, Level 2
- Tickets
-
Standard FULL
- Venue Address
- 5 Campbell Lane, Singapore 209924 Singapore
- Organizer
-
Indian Heritage Centre711 Followers
50
